

தமிழகம் முழுவதும் 8 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளன. அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தலைவர் என்.சிவகுமார் தெரிவித்தார்.
ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் 93 ஆயிரம் செட்டாப் பாக்ஸ் இணைப்புகள் இருந்தன. தற்போது அவற்றில் 23 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் செயல்படாமல் உள்ளன. இந்த செட்டாப் பாக்ஸ்கள் கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் பொதுமக்களிடமும் உள்ளது. இவை அரசின் சொத்துஎன்பதால், அதைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் இதுபோன்று 8 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் செயல்படாமல் உள்ளன. அவை முறையாக அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. கிராமப் பகுதி முழுவதும், அரசு கேபிள் டிவி, இணையதள வசதி செய்து கொடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. சில இடங்களில் கட்டாயப்படுத்தி தனியார் கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.