

ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக வெள்ளித்திருப்பூர் ஊராட்சி கவுன்சிலர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளித்திருப்பூர் ஊராட்சி கவுன்சிலர்கள் ராமசாமி, செங்கோடன், செல்லமுத்து, கண்ணுசாமி, காளியம்மாள், கண்ணாயாள், சங்கீதா, சாந்தி, வெங்கடேஷ் ஆகிய ஒன்பது பேர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளித்திருப்பூர் ஊராட்சி கவுன்சிலர்களாகப் பணியாற்றி வருகிறோம். எங்கள் ஊராட்சித்தலைவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார். ஊராட்சி மன்ற கூட்டத்தை எங்களுக்கு முறைப்படி அழைப்பு கொடுத்து நடத்துவது இல்லை. எங்கள் ஒப்புதல் இல்லாமல் தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்.
இந்நாள் வரையில் வரவு, செலவு விவரத்தை வார்டு உறுப்பினர்களாகிய எங்களிடம் காட்டியதில்லை. ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு முறையாக டெண்டர் விடுவது இல்லை. இதேபோல் ஊராட்சி துணைத் தலைவர், அரசு விதிமுறைகளை மீறி முறைகேடாக ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். இவர்களுக்கு ஆதரவாக ஊராட்சி செயலர் செயல்பட்டு வருகிறார்.
இந்த மூவரின் முறைகேடான செயல்பாடு குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு, ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி செயலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில், ஊராட்சி நிதியை முறையாக கையாளுவதற்கும், ஊராட்சி கூட்டத்தை முறையாக நடத்துவதற்கும் ஒரு சிறப்பு அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.