

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையம் கால்நடை சந்தை இன்று திறக்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற இச்சந்தை செவ்வாய்க்கிழமைகளில் கூடும். இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்துஆடு, மாடுகள், கோழிகள் மற்றும் கருவாடு கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும். இவற்றை வாங்க ஏராளமானோர் இச்சந்தைக்கு வருவார்கள். கரோனா ஊரடங்கால் கடந்த 2 மாதமாக சந்தை மூடப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 வாரமாக சந்தையை சுற்றியுள்ள பகுதிகளில் தடையை மீறி கால்நடைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணுசந்திரன், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வகாப் மற்றும் அதிகாரிகள் சந்தையைஆய்வு செய்தனர். தொடர்ந்து, சந்தையை இன்று திறக்க முடிவு செய்யப்பட்டது. சந்தையில் சமூக இடைவெளியுடன் கடைகளை நடத்தவும், அனைவரும் கைகளை கழுவவும் ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.