

கரோனாவில் இருந்து குழந்தைகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள யோகா செய்ய வலியுறுத்தி சேலம் மாணவி 31 நிமிடம் தலையில் தக்காளி வைத்து பத்மாசனத்தில் அமர்ந்து யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தேவியாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் - சுதா தம்பதியின் மகள் தர்ஷிகா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே யோகா மீது ஆர்வம் கொண்ட இவர் ஊரடங்கு காலத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
இவருக்கு திருச்சியைச் சேர்ந்த பதஞ்சலி கிருஷ்ணகுமார் குருஜி என்பவர் பயிற்சி அளித்தார்.
கரோனா மூன்றாம் அலையில் குழந்தைகளை பாதிக்கும் என்ற அச்சம் உள்ள நிலையில், யோகா மூலம் நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்க செய்து தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு செய்ய தர்ஷிகா முடிவு செய்தார்.
இதையடுத்து, சேலம், மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாணவி தர்ஷிகா பத்மாசனமிட்டு, தலையில் தக்காளிப்பழத்தை வைத்து 31 நிமிடம் யோகாசனம் செய்தார். இதையடுத்து, மாணவி தர்ஷிகாவை சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையர் வேதரத்தினம் பாராட்டினார். மேலும், தர்ஷிகாவை பாராட்டி, ‘பதஞ்சலி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ அமைப்பு சார்பில் கேடயம் மற்றும் சான்றிதழை குருஜி கிருஷ்ணகுமார் வழங்கினார்.
இதுதொடர்பாக மாணவி தர்ஷிகா கூறும்போது, “கரோனா மூன்றாவது அலையில் இருந்து குழந்தைகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள யோகாசனம் செய்வது அவசியம். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த யோகாவில் ஈடுபட்டேன். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அனைவரும் யோகா செய்யலாம்” என்றார்.