

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கெரிகேப்பள்ளியைச் சுற்றி நாடார் தெரு, புதுக்காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், கடந்த 1962-ம் ஆண்டு கெரிகேப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய பள்ளி தொடங்கப்பட்டது. கடந்த 2018-19-ம் கல்வியாண்டில், இப்பள்ளியில் 28 மாணவ, மாணவிகள் மட்டுமே கல்வி பயின்று வந்தனர்.
இந்நிலையில் பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை 3 ஆண்டுகளில் 177 ஆக உயர்ந்துள்ளது.
தனியார் பள்ளிக்கு இணையாக அனைத்து வசதிகளும் உள்ளதால், அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களைச் சேர்த்து வருவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக இப்பள்ளியின் தலைமையாசிரியர் வீரமணி கூறும்போது, எங்கள் பள்ளியில் கடந்த 2018-19-ல் மாணவர் எண்ணிக்கை 28 ஆக இருந்தது. மாணவர்களிடையே கல்வி கற்கும் சூழ்நிலையைஏற்படுத்த வேண்டும் என்பதற்காக,தனியார் பங்களிப்புடன் பல்வேறு வசதிகளை பள்ளியில் ஏற்படுத்தி வருகிறோம்.
அதன் பயனாக 2019-20-ல் 58 மாணவர்களும், 2020-21ல் 103 மாணவர்கள் சேர்க்கை இருந்தது. கரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இருப்பினும் மாணவர்களுக்கு இணையம் மூலம் பாடங்கள் கற்பித்து வருகிறோம். மேலும், இணையதளம் மூலம் கல்வி தொடர்பான பல்வேறு போட்டிகளில் மாணவர்களை பங்கேற்கச் செய்து வருகிறோம். மேலும், கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவ, மாணவிகள் கல்வி கற்பதை பெற்றோர்கள் மூலம் உறுதி செய்து கொள்கிறாம்.
தொடர் நடவடிக்கைகளால் நிகழாண்டில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது என்றார்.