தூத்துக்குடியில் பெரிய அளவிலான - பர்னிச்சர் தொழில் பூங்கா தொடங்க திட்டம் :
``தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் பெரிய அளவிலான பர்னிச்சர் தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது” என, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று தெரிவித்தார்.
தமிழக அரசின் தொழில் முனை வோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கம் (துடிசியா) மற்றும் மாவட்டம் தொழில் மையம் ஆகியவை சார்பில், தொழில்முனைவோருக்கான தீர்வு மையம் தொடக்க விழா துடிசியா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சேவை மையத்தை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பேசியதாவது:
இளம் தொழிலதிபர்களை ஊக்குவிக்க வேண்டும். அனுபவமுள்ள தொழிலதிபர்கள் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். தொழிற் சாலை களில் தயாரிக்கப் படும் பொருட்களை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில்தான் கப்பல் போக்குவரத்து, சாலை போக்கு வரத்து, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து என அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளும் உள்ளன. தொழில் தொடங்க இடம் மற்றும் மின்சார வசதியும் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு மின்திட்டங்கள் மூலம் 3,000 மெகாவாட், காற்றாலைகள் மூலம் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சூரியசக்தி மூலமும் குறிப்பிட்ட அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், உடன்குடியில் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் மின்திட்ட பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பெரிய அளவில் பர்னிச்சர் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடியில் சிறிய அளவில் உணவு தொழில் பூங்கா உள்ளது. இதன்மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதிக்கான உதவிகளும் செய்யப்பட உள்ளது.
மதுரை- தூத்துக்குடி தொழில்வழித்தட பகுதியில் பின்னலாடை தொழில்களை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளம் தலைமுறையினர் தொழில் தொடங்கிட அரசு சார்பில் பல்வேறு கடன் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோவின் மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. விமான நிலைய விரிவாக்க பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் ஓடுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி பகுதியில் ஆட்டோ ஸ்பேர்ஸ் தொழிற்சாலை மற்றும் ஆயில் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அமையும்போது இப்பகுதியில் உள்ள சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும். இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்வளர்ச்சி விரைவில் அதிகரிக்கும் என்றார் ஆட்சியர்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா, துடிசியா தலைவர் கே.நேரு பிரகாஷ், பொது செயலாளர் ஜெ.ராஜ் மற்றும் தொழில்முனைவோர் கலந்துகொண்டனர்.
