

கரோனா மற்றும் ஜிகா வைரஸ் பரவலைக் கண்டறியும் வகையில், ஈரோடு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் முகாம் அமைத்து பயணிகள் பரிசோதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் கரோனா பரவல் மற்றும் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு மார்க்கமாக தற்போது 20 ரயில்கள் இயங்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணிப்போர் மூலம் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில் நிலையங்களில் முகாம் அமைத்து பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும், புதிதாக வருவோர் குறித்தும் தகவல் கூற வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். மேலும், சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவு உள்ளவர்கள் அவர்களாகவே முன் வந்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகி, சிகிச்சை பெற அறிவுறுத்தி வருகிறோம்.
ரயில் நிலையம், பேருந்துநிலையப் பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பில் முகாம் அமைத்து பயணிகளை பரிசோதிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து ஈரோடு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் சுகாதாரத்துறை மூலம் முகாம் அமைத்து பயணிகளை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பிற மாநிலங்கள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.