

தூத்துக்குடி வடபாகம் காவல்ஆய்வாளர் அருள், உதவிஆய்வாளர்கள் வேல்ராஜ், சிவராஜா ஆகியோர், நேற்று முன்தினம் கருத்தபாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் 50 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டி வந்த குளத்தூரைச் சேர்ந்த மாரியப்பன் (34) என்பவரைக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையின்படி, வட்டக்கோவில் அருகே மற்றொரு மினி லாரியில் 37 மூட்டைகளில் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் 87 மூட்டைகளில் 1.7 டன் எடையுள்ள 2,50,968 பாக்கெட் புகையிலைப் பொருட்கள், 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.14 லட்சம்.
எஸ்பி ஜெயக்குமார் கூறும்போது, ``மாவட்டத்தில் இந்தஆண்டு இதுவரை கஞ்சாவிற்பனை மற்றும் கடத்தலில்சம்பந்தப்பட்டதாக 184 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 219 பேர் கைது செய்யப்பட்டு, 84 கிலோ கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 93 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 763 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 773 பேர் கைது செய்யப்பட்டு, 72 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார். டிஎஸ்பி கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.