

சேலத்தில் இடைபடுகாடுகள் திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட ஊத்துமலை மற்றும் நாமமலை கரடுகளை வனத்துறையின் கட்டுப்பாட்டில் இணைப்பது தொடர்பாக வனத்துறை அலுவலர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
தமிழக வனப்பகுதியை பசுமையாக்கல் மற்றும் வனப்பகுதியை பெருக்கும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காப்புக்காடுகள் மற்றும் குன்றுகள் அடங்கிய வருவாய்த் துறை நிலங்களில் இடைபடுகாடுகள் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த வகையில் சமூக நலக்காடுகள் பிரிவின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேம்பு, புங்கன், மலைவேம்பு, தேக்கு, மருதம், வாகை என பவ்வேறு மரக்கன்றுகள் வனத்துறை சார்பில் நடப்பட்டு வருகிறது.
சேலத்தில் இடைபடுகாடுகள் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்ட ஊத்துமலை மற்றும் நாமமலை கரடுகளை வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இணைக்க அதிகாரிகள் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சின்னதம்பி, காரிப்பட்டி வனவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நாமமலை, ஊத்துமலை கரடுகளில் வனத்துறையால் நடவு செய்யப்பட்ட, மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், இம்மலை குன்றுகளை வனத்துறை கட்டுப்பாட்டில் இணைக்கத் தேவையான பூர்வாங்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வுக்கு பின்னர் குழுவினர் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்து, முறையான அனுமதி பெற்று அரசின் பரிந்துரைப்படி வனத்துறையில் இணைக்கத் தேவையான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.