

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி மாசுபடுவதை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தலைமை வகித்தார். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, அம்பாசமுத்திரம் மற்றும் விக்ரமசிங்கபுரம் நகராட்சி உட்பட 8 பேரூராட்சி பகுதிகளில், தாமிரபரணியில் கழிவுநீர் நேரடியாக கலப்பதை தடுக்கவும், ஆற்று நீரின் தரம் குறித்தும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வரும் காலங்களில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய ஆணைக்கிணங்க மேற்கொள்ள வேண்டிய குறுகியகால மற்றும் நீண்ட கால முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வல்லுநர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.