

பணம் மற்றும் நகைகளை பறிக்க திட்டமிட்டு கவனத்தை திசை திருப்பும் மர்ம நபர்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொது இடம் அல்லது வீடுகளில் இருக்கும்போது உங்களை அந்நிய நபர்கள் அணுகலாம். உங்களது தனிப்பட்ட உடல்சார்ந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஆயுர்வேத மருந்து தயாரித்து கொடுப்பதாக கூறி, உங்களது கவனத்தை திசை திருப்புவார்கள். தனிப்பட்ட மற்றும் குடும்ப சிக்கல்களுக்கு ஜோதிடம் அல்லது மாந்திரீகம் மூலமாக தோஷம் நிவர்த்தி செய்வதாக கூறி கவனத்தை திசை திருப்புவார்கள். உறவினரின் உறவினர் அல்லது நண்பரின் நண்பர் எனக் கூறி திசை திருப்புவார்கள். பணம், கைப்பை, செல்போன், பர்ஸ் மற்றும் நகை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று கீழே விழுந்துவிட்டதாக கவனத்தை திசை திருப்புவார்கள். அரசாங்கத்திடம் இருந்து நிவாரணத் தொகை பெற்றுத் தருவதாக கூறுவார்கள். அவ்வாறு திசை திருப்பும்போது உங்களது பணம் அல்லது நகைகளை அந்நிய நபர்கள் பறித்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். அவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உங்கள் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் அந்நிய நபர்கள் சுற்றினால், ‘ஹலோ திருவண்ணாமலை போலீஸ்’ 99885 76666 என்ற செல்போன் எண் அல்லது காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண்–100-ஐ தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.