

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ்காரர் மீது மிளகாய் பொடியை தூவி, கொலை வழக்கில் தொடர்புடைய கைதி தப்பியோட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனியை சேர்ந்த ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் லாமேக் தங்கராஜ் மகன் அருள்விசுவாசம் (48) என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ் வழக்கில் அவரது நண்பர்கள் மணிகண்டன் (42), ஜேசுபாய் (49), மரியசிலுவை (44) ஆகியோரை பெருமாள்புரம் போலீஸார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களில் மரியசிலுவையின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் பாத்ரூம் செல்வதற்காக மரியசிலுவையின் கைவிலங்கு கழற்றப்பட்டது. அப்போது, திடீரென்று தான் வைத்திருந்த மிளகாய் பொடியை பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தங்கராஜ் மீது தூவி விட்டு, அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார்.
ஆனால் கண்எரிச்சலையும் பொருட்படுத்தாமல் மரியசி லுவையை தங்கராஜ் விரட்டிச் சென்று சிறிது தூரத்தில் மடக்கி பிடித்தார். இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் அங்குவந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மரியசிலுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கண்எரிச்சலையும் பொருட்படுத்தாமல் மரியசிலுவையை தங்கராஜ் விரட்டிச் சென்று சிறிது தூரத்தில் மடக்கி பிடித்தார்.