

தேசிய அளவில் கொண்டாடப்படும் ‘வன மகோத்சவத்தை’ முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் 9 ஆயிரம் மரக்கன்றுகளை ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டனர்.
நாடு முழுவதும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் ‘வன மகோத்சவம்’ (வன திருவிழா) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுச்சூழல் இயக்கமான காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது.
அதன்படி திருநெல்வேலியில் 9 ஏக்கரில் 2, 200 மரக்கன்றுகளும், தூத்துக்குடியில் 9.5 ஏக்கரில் 2,500 மரக்கன்றுகளும், தென்காசியில் 18 ஏக்கரில் 4,200 மரக்கன்றுகளும் விவசாயிகளால் நடப்பட்டது.
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு லாபகரமான வேளாண் காடு வளர்ப்பு குறித்த சிறப்பு ஆன்லைன் கருத்தரங்கும் நடத்தப்பட்டது. இதில் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் டீன் பார்த்திபன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் கே.எம்.சிவக்குமார், சுரேஷ் டிம்பர் உரிமையாளர் சுரேஷ் கண்ணன், ஷோபா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரீஷ் பாபு, முன்னோடி விவசாயிகள் செந்தில் குமார், அமர்நாத் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர்.