புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம் : உலமாக்கள் விண்ணப்பிக்க சேலம் ஆட்சியர் அழைப்பு

புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம் :  உலமாக்கள் விண்ணப்பிக்க சேலம் ஆட்சியர் அழைப்பு
Updated on
1 min read

புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ, அத்தொகையை மானியமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய தொழிநுட்பத்துடன் கூடிய கியர்லெஸ், ஆட்டோ கியர் கூடிய இன்ஜின் 125 சிசிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர் தயார் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.

மனுதாரர் தமிழகத்தைச் சேர்ந்தவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்தவராகவும், 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்தால் பேஷ் இமாம், அரபி ஆசிரியர்கள், மோதினார், முஜாவர் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மானியத் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பத்துடன் ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, வயதுச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று, சாதிச் சான்று, ஒட்டுநர் உரிமம் அல்லது எல்எல்ஆர், கல்வி தகுதிச் சான்று (குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு (தேர்ச்சி, தோல்வி) சான்றிதழ் உள்ளிட்டவைகளின் நகல்கள் மற்றும் வங்கிக் கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி குறியீட்டுடன் கூடிய வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மேலும் முத்தவல்லியிடம் இருந்து பணி அனுபவச் சான்று பெற்று மாவட்ட வக்ஃப் கண்காணிப்பாளர் ஒப்புதலுடன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் வாகனத்தின் விலைப்பட்டியல், விலைப்புள்ளி இணைக்க வேண்டும்.

சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், எண்.110, ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in