

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ.19.34 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்து, வணிக வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலைய 5-வது நடைமேடையில் நேற்று முன்தினம் மாலை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் அரவிந்த்குமார் தலைமையிலான போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, எர்ணாகுளம்-பிலாஸ்பூர் சிறப்பு ரயிலுக்காக காத்திருந்த சந்தேகத்துக்கு இடமான நபரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் வைத்திருந்த பையில் வெள்ளிக் கொலுசு, வெள்ளி அரைஞாண் கயிறு உள்ளிட்ட ரூ.19.34 லட்சம் மதிப்புள்ள 28.9 கிலோ வெள்ளிப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், சேலம் குகையைச் சேர்ந்த ஜாபர்உசேன் (46) வெள்ளிப் பொருட்களை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிந்தது.
இதையடுத்து, ரயில்வே போலீஸார் சேலம் வணிக வரித்துறை அலுவலர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிப் பொருட்களை ஒப்படைத்தனர். இது தொடர்பாக வணிக வரித்துறையினர் ஜாபர் உசேனிடம் விசாரித்து வருகின்றனர்.