

சேலம் தற்காலிக பழைய பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதி சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் சீர்மிகு திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்துக்கு புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள போஸ் மைதானம் அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும், தற்காலிக பேருந்து நிலையம் உள்ள பகுதியில் பழமையான நேரு கலையரங்கம் இடிக்கப்பட்டு, புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்காலிக பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகேயுள்ள சாலையில் சிறுகடைகள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. மேலும், நேரு கலையரங்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், பாதுகாப்பு கருதி, பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், நுழைவு வாயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால், பேருந்து நிலையத்தினுள் பேருந்துகள் செல்வதில் இடையூறு ஏற்பட்டு பேருந்துகள் தேங்கி நிற்கும் நிலையுள்ளது. பேருந்து நிலையத்துக்கு அடுத்தடுத்து வரும் பேருந்துகள் நுழைவு வாயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டு வெகுநேரம் காத்திருக்கும் நிலையுள்ளது. பெரும்பாலான பயணிகள் வெளியிலேயே இறங்கி விடுகின்றனர்.
அவ்வாறு இறங்கும் பயணிகள் குறுகிய பாதையில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு பேருந்து நிலையத்துக்குள் செல்ல வேண்டிய நிலையுள்ளது.
இதனால், கரோனா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேலம் மாநகராட்சி நிர்வாகமும் மற்றும் போக்குவரத்து போலீஸார் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.