

சேலம் சிவதாபுரம் சேலத்தாம்பட்டி ஏரியில் மழைக் காலங்களில் ஏரி நீர் அருகில் உள்ள தாழ்வான பகுதிகளுக்குள் செல்வதை தடுப்பது தொடர்பாக ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் ஊராட்சி ஒன்றியம் சிவதாபுரம் அருகில் உள்ள சேலத்தாம்பட்டி ஏரியில் மழைக் காலங்களில் மழை நீர் பெருகி ஏரி நீர் தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது. இதனால், மழை பெய்யும் நேரங்களில் அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையுள்ளது. மழை நேரத்தில் மட்டும் இப்பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்பிரச் சினைக்கு நிரந்தர தீர்வு காண தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேற்று ஏரியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்கு பின்னர் ஆட்சியர் கூறியதாவது:
சிவதாபுரம் அருகே சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் உள்ள சேலத்தாம்பட்டி ஏரி மழைக் காலங்களில் மழை நீர் பெருகி ஏரி நீர் வாய்க்காலின் வழியாக சாலைகளில் வழிந்தோடுவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.
மழைக் காலங்களில் ஏரி நீர் தாழ்வான பகுதிகளுக்குள் புகுவதைத் தடுத்து இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, சேலம் மாநகர பொறியாளர் அசோகன், சேலம் மேற்கு வட்டாட்சியர் தமிழரசி, மாநகராட்சி மாநகர் நல அலுவலர் பார்த்திபன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன், நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநர் சுப்பிரமணியன், உதவிப் பொறியாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.