ஜூலை மாதத்துக்கான மத்திய அரசின் தொகுப்பில் இருந்து - 71 லட்சம் தடுப்பூசிகள் பெற நடவடிக்கை : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அருகில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அருகில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர்.
Updated on
1 min read

தமிழகத்துக்கு ஜுலை மாதத்துக்கான மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 71 லட்சம் தடுப்பூசிகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் மற்றும் பெண்களுக்கு என 2 நல வாழ்வு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்களை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3-வது அலை, குழந்தைகளை தாக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் 1.70 லட்சம் பரிசோதனைகள் தினசரி செய்யப்படுகின்றன. இந்தியாவிலேயே அதிகஎண்ணிக்கையில் பரிசோதனை செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தொற்று குறைந்து வந்தாலும், தினசரி பரிசோதனை எண்ணிக்கை அதே அளவில் நீடிக்கிறது.

தமிழகத்தில் 1.57 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டன. ஜுலை மாதத்துக்கான, மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 71 லட்சம் தடுப்பூசி வர வேண்டும். 10 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. எஞ்சிய தடுப்பூசிகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தன்னிறைவு ஊராட்சி

முதல் அலையில் இருந்த வீரியத்தை விட, 2-வது அலையில் கரோனா தொற்றின் வீரியம் கூடுதலாக இருந்தது. 3-வது அலையை எதிர் கொள்ள தயாராக உள்ளோம். 1 லட்சம் புதிய படுக்கைகளில் 90 சதவீதம் ஆக்சிஜன் வசதி கொண்டது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைக்காக 75 இடங்களில் 100 முதல் 150 படுக்கைகள் உள்ளன.

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்படுத்திய மக்கள் இயக்கத்தின் மூலமாக 2-வது அலை தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 95 சதவீத மக்கள், முதல்வரின் அறிவுரைகளை கடைபிடித்து வருகின்றனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார். அதனால், தடுப்பூசி செலுத்த வேண்டும் என மக்கள் போராடும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது" என்றார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உட்பட பலர் ஆய்வில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in