முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி : ஆவினில் 1.50 டன் இனிப்புகளை பெற்றுள்ளார் : பால் வளத்துறை அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு

சேலம் ஆவின் பால்பண்ணையில் பால் பொருட்கள் உற்பத்தி பிரிவில் அமைச்சர் நாசர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். உடன் பால்வளத்துறை மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர்.படம்: எஸ்.குரு பிரசாத்
சேலம் ஆவின் பால்பண்ணையில் பால் பொருட்கள் உற்பத்தி பிரிவில் அமைச்சர் நாசர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். உடன் பால்வளத்துறை மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர்.படம்: எஸ்.குரு பிரசாத்
Updated on
1 min read

சேலத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் விற்பனை தொடர்பாகவும், ஆவின் பால் பண்ணையில் பால் பொருட்கள் உற்பத்தி தொடர்பாகவும் பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆவினில் இடைத்தரகர்கள் மூலம் முறைகேடாக 234 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. எஃப்எஸ்ஏ பணியாளர்கள் 460 பேர், நிர்வாகப் பிரிவில் 124 பேர் எந்த முகாந்திரமும் இன்றி விதிகளுக்கு உட்படாமல் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்களை ரத்து செய்துள்ளோம்.

பால் டேங்கர் லாரி ஒப்பந்தம் உள்ளிட்ட பல ஊழல்கள் நடந்துள்ளன. இவை தொடர்பான முழுமையாக விசாரணை நடத்தப்படும். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தீபாவளியின்போது இலவசமாக விநியோகிக்க 1.50 டன் இனிப்புகளை ஆவினில் இருந்து பெற்றிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. விரைவில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆந்திராவில் ஆவின் பால் விற்பனைக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதேபோல், வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் ஒப்பந்தம் போடப்பட உள்ளன. ஆவினில் பணிபுரிந்து உயிரிழந்த 48 பேரின் குடும்பத்துக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்குவது 14 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒரு வாரத்தில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது என்றார்.

பால் வளத்துறை மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, ஆட்சியர் கார்மேகம், சேலம் ஆவின் பொது மேலாளர் நர்மதா தேவி, எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in