

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் அருகே உள்ள தட்டான் குளத்தைச் சேர்ந்தவர் வேல்சாமி (59), விவசாயி. இவர், தனது வீட்டை பூட்டிவிட்டு ஆடுகளை மேய்க்கச் சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்தபோது, முன்புறக் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 2.50 லட்சம் பணம், 10 பவுன் நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா (58). இவர், விவசாய வேலைக்கு சென்றபோது, மர்ம நபர்கள் இவரது வீட்டை திறந்து, பீரோவில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து முருகையா அளித்த புகாரின் பேரில் சின்ன கோவிலாங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.