

ஈரோடு மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை உட்பட பல்வேறு புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார். எம்எல்ஏ இ.திருமகன் ஈவெரா முன்னிலை வகித்தார்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், ஊராட்சிக்கோட்டை தனிக் குடிநீர் திட்டம் மற்றும் புதை மின்வடம் ஆகிய பணிகளால் சேதமடைந்த சாலைகளை, தமிழ்நாடு சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 63 சாலைகள் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்யப்படவுள்ளது. ஈரோடு கங்காபுரம் சாலை, எஸ்எஸ்பி நகர் சாலை, பாலாஜி சாலை மற்றும் ராஜாஜிபுரம் 1, 2 உள்ளிட்ட சாலைகள் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், எலவமலை ஊராட்சி கலைஎல்லப்பாளையம் கிராமத்தில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் மயானம் மேம்பாடு செய்யும் பணி உள்பட 6 புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 69 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட ஆக்சிஜன் வசதியுடன் 400 படுக்கைகள் கொண்ட கட்டிடத்தை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். அப்போது 45 நாளில் கட்டிடம் கட்டப்பட்டது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வர் மணி, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை) உதவி செயற்பொறியாளர் எஸ்.கே.ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.