

மானாமதுரையில் செயல்படாத அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையால் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வீணாவதாக புகார் எழுந்துள்ளது.
மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் 2004-ல் அரசுப்போக்குவரத்துக் கழகப் பணிமனை தொடங்கப் பட்டது. அரசியல் காரணங்களால் பணிமனை தொடங்கிய சில மாதங்களிலேயே பேருந்துகளுக்கு டீசல் நிரப்புவது, பழுது நீக்குவது போன்ற பணிகள் நிறுத்தப்பட்டன. ஊழியர்கள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர். இங்கு நிறுத்தப்பட்ட பேருந்துகள் சிவகங்கை போக்குவரத்துக்கழகப் பணிமனையில் நிறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது சில பேருந்துகள் மட்டுமே மானாமதுரை பணிமனையில் நிறுத்தப்படுகின்றன.
மேலும் பணிமனையில் காவலாளி மட்டும் பணியில் உள்ளார். இந்தப் பணிமனைக்குரிய இடத்துக்கு ஆண்டுதோறும் அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் வாடகை செலுத்தப்படுகிறது. மானாமதுரையில் இயக்கப்படும் பேருந்துகள் சிவகங்கையில் இருந்து இயக்கப்படுவதால் கூடுதலாக டீசல் செலவாகிறது. இட வாடகை, காவலாளி ஊதியம், டீசல் செலவு என ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை அரசுப் போக்குவரத்துக் கழகம் வீணாகச் செலவழிப்பதாக தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சிலர் கூறுகையில், ஆண்டுதோறும் ரூ.30 லட்சம் வீணாவதைத் தடுக்க மானாமதுரை பணிமனையைத் மீண்டும் திறந்து செயல்படுத்த போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மானாமதுரை பணிமனை விரைவில் மீண்டும் முழுமையாக செயல்பட வாய்ப்புள்ளது,’ என்றார்.