

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 75 ஏக்கர் இடத்தில் பாலிடெக்னிக் அல்லது கலைக்கல்லூரி தொடங்குவது குறித்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் திருப் பணிகள் மேற்கொள்வது தொடர் பாக எம்.பி., கனிமொழி, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இக்கோயிலில் ரூ. 90 லட்சம் மதிப்பில் சுவாமி கர்ப்பகிரகம், பூமாதேவி மற்றும் தேவி சந்நிதிகள் சீரமைத்தல், கல் மண்டபம் அமைத்தல், தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து கலந்தாய்வு மேற்கொண்டனர்.
இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் குமரகுருபரன், ஆணையர் சந்திரமோகன், சுற்றுலா மேம்பாட்டு துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, இவர்கள் திருச்செந்தூர் விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். `திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை திருப்பதி கோயிலுக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும். இக்கோயிலில் குடமுழுக்கு நடத்த வேண்டும் அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். யாத்ரீகர்கள் நிவாஸ் கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வேண்டும். கூடுதல் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்’ என, அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.
திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமாக, ராணிமகாராஜபுரத்தில் உள்ள 75 ஏக்கர் இடத்தை பார்வையிட்டனர். அங்குஅறநிலையத்துறை சார்பில் பாலிடெக்னிக் அல்லது கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்குவது சம்பந்தமாக ஆலோசனை நடத்தி னர்.