

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஆச்சிபட்டி ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளனர். அதில், “ஆச்சிபட்டி ஊராட்சியில் உள்ள தில்லைநகர், திரு.வி.க. நகர், ஆ.சங்கம்பாளையம், ஆச்சிபட்டி ஆகிய கிராமங்களில் 9000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். தொற்று பரவல் காலத்தில் இங்குள்ள தமிழ்மணி நகர், லட்சுமி நகர் மற்றும் ஆச்சிபட்டி பகுதிகள் அடைக்கப்பட்டன. ஆச்சிபட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் பொள்ளாச்சியில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பலமணி நேரம் காத்திருந்தும் தடுப்பூசி கிடைக்காமல் திரும்பி வருகின்றனர். இதுவரை இந்த ஊராட்சியில் தடுப்பூசி முகாம் நடத்தப்படாமல் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஆச்சிபட்டி ஊராட்சியில் தடுப்பூசி முகாம் நடத்தவேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.