திண்டுக்கல்லில் ஜூலை 10-ல் லோக் அதாலத் :

திண்டுக்கல்லில் ஜூலை 10-ல் லோக் அதாலத் :
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 10-ம் தேதி மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம்.கே.ஜமுனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகம் மற்றும் அனைத்து தாலுகா நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதன் முக்கிய நோக்கம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சமரச முறையிலும் முடித்து மக்களுக்கு நீதி கிடைக்க செய்வதாகும். மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுவதால் இரு தரப்பினருமே வெற்றியாளர்கள். இந்த நீதிமன்றத்தில் காசோலை தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன்கள், கல்விக் கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்பப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்துவரி பிரச்சினைகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் யாருக்காவது மேலே குறிப்பிட்ட வகையான வழக்குகள் நிலுவையில் இருந்தால் உடனடியாக அந்தந்த நீதிமன்றங்களை அணுகி சமரச தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in