

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தரம் குறித்து புகார் எழுந்த சாலையை பிடிஓ நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினார்.
அரூர் வட்டம் தீர்த்தமலை ஊராட்சிக்கு உட்பட்ட குரும் பட்டியில் அண்மையில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை போதிய தரத்தில் அமைக்கவில்லை என புகார் எழுந்தது. எனவே, தருமபுரிமாவட்ட கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநருமான மருத்துவர் வைத்திநாதன் அந்த சாலையின் தரத்தை ஆய்வு செய்து உண்மைத்தன்மை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் நேற்று, அரூர் பிடிஓ ஜெயராமன் தலைமையிலான குழுவினர் அந்த சாலையில் பல்வேறு இடங்களில் தரத்தை உறுதி செய்யும் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வில் அரசு நிர்ணயித்த தரத்தில் சாலை அமைக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்த குழுவினர் இதுகுறித்து மாவட்ட கூடுதல் ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.