

தூத்துக்குடி: திருச்செந்தூர் ஜீவாநகரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சிவமுருகன் (24), டிப்ளமோ முடித்து, சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஊருக்கு வந்திருந்த அவர், நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றார்.
இரவு வெகு நேரமாகியும் சிவமுருகன் வீடு திரும்பவில்லை. அவரது தம்பி முத்தரசன் மற்றும் நண்பர்கள் தேடிப் பார்த்தனர். திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தலையில் பலத்த காயத்துடன் சிவமுருகன் இறந்து கிடந்தார்.
திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். வீரபாண்டியன்பட்டிணம் வாவு நகரைச் சேர்ந்த சங்கர் மகன் சண்முகசுந்தர் (26) என்பவரும், சிவமுருகனும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், கட்டையால் தாக்கப்பட்ட சிவமுருகன் இறந்து போயுள்ளார். சண்முகசுந்தரை திருச்செந்தூர் தாலுகா போலீஸார் கைது செய்தனர்.