வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - மின் பராமரிப்புப் பணியில் 3,017 மரக்கிளைகள் அகற்றம் :

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் -  மின் பராமரிப்புப் பணியில்  3,017 மரக்கிளைகள் அகற்றம் :
Updated on
1 min read

வேலூர் மின் பகிர்மான வட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பராமரிப்புப் பணிகளின்போது 3,017 மரக்கிளைகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியத்தில் கடந்த சில மாதங்களாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதற்காக. ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தை உள்ளடக்கிய வேலூர் மின் பகிர்மான வட்டத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணியில் மேற்பார்வை பொறியாளர் பொறியாளர் ராஜன் ராஜ் தலைமையில் சுமார் 1,200 பேர் ஈடுபட்டனர்.

இதில், 3 ஆயிரத்து 17 இடங்களில் மின் பாதைகளின் அருகே மற்றும் மின் சாதனங்களுக்கு கீழே இருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றியுள்ளனர். 526 இடங்களில் தாழ்வாக இருந்த மின்பாதைகளுக்கு இடையில் புதிய மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், 217 இடங்களில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றியும் 111 இடங்களில் சாய்வான நிலையில் இருந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டன. மேலும், மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட 22 துணை மின் நிலையங்களில் வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதுடன் 145 இடங்களில் உடைந்த இழு கம்பிகள் சரிசெய்யப்பட்டதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in