

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தைச் சேர்ந்த 17 வயதுள்ள சிறுமி, திருப்பத்தூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள சித்தி தவமணி வீட்டுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வந்தார். இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (29) என்பவர் அடிக்கடி தவமணி வீட்டுக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தவமணி வீட்டுக்கு வந்த ராஜேஷ் அங்கிருந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதற்கு, அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், ராஜேஷ் வலுக்கட்டாயமாக சிறுமியின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார்.
இது குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கெளரி வழக்குப்பதிவு செய்த சிறுமியை கட்டாயப்படுத்தி தாலி கட்டிய ராஜேஷை நேற்று கைது செய்தனர்.இதற்கு, உடந்தையாக இருந்த சிறுமியின் சித்தி தவமணி, சித்தப்பா அசோக், பெரியப்பா சங்கர் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.