

நாட்றாம்பள்ளி வட்டத்தில் அரசுஇடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாக வந்த புகாரின் மீது வருவாய்த் துறையினர் ஆய்வு நடத்தி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டையூர் மற்றும் மங்களம் ஆகிய கிராமங்களில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப் படவுள்ளன. இந்த இடங்களை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று நேரில் ஆய்வு செய்தார். அதன்பிறகு, நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நாட்றாம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.
இது குறித்து ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறும்போது, '' ஏலகிரிமலைக்கிராமத்தில் உள் விளை யாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள் ளது. இது தொடர்பான அறிக்கை அரசு கவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோல, திருப் பத்தூர் மாவட்டத்தில் முதியோர் ஓய்வூதியம் பயனாளிகளுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை வட்டாட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்.
நாட்றாம்பள்ளி வட்டத்தில் இ-சேவை மையங்கள், வருவாய் கிராமங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கிகள் செயல்பாடுகள் ஆய்வு நடத்தப்பட்டுள்ளன. நாட்றாம்பள்ளி வட்டத்தில் அரசு இடங்கள் ஆக்கிரமிப்பு உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. எனவே, ஆய்வு நடத்தி அரசு இடங்களை வருவாய்த் துறையினர் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலம் பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நியாய விலைக்கடைகளிலும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.
இதையடுத்து, நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்களை ஆட்சியர் அமர்குஷ்வாஹா பெற்றுக் கொண்டார். பேரூராட்சி அலுவல கத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்த ஆட்சியர் அமர் குஷ்வாஹா அவற்றை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அப்போது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆழிவாசன், வட்டாட்சியர்கள் சிவப்பிரகாசம் (திருப்பத்தூர்), மகாலட்சுமி (நாட்றாம்பள்ளி), பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.