ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள்: : ஆட்சியர், ஆணையர் ஆய்வு :
கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் மற்றும் ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையை மாதிரி சாலையாக மாற்றுதல், உக்கடம் பெரிய குளம் உட்பட பல்வேறு குளங்களை சீரமைக்கும் பணிகள், பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணி உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட், உழவர் சந்தை ஆகியவற்றை பார்வையிட்டு, அங்கிருந்த வியாபாரிகளிடம், அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். முன்னதாக, குறிச்சி குளத்தில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் ரூ.52.16 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுவரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகர பொறியாளர் ஆ.லட்சுமணன், மண்டல உதவி ஆணையர்கள் சுந்தர்ராஜன், சரவணன், செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
