

வத்தலகுண்டு அருகேயுள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணையின் மதகுகள் புதுப்பிக்கும் பணி ரூ.2 கோடி மதிப்பீட்டில் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலையடி வாரத்தில் உள்ள மருதாநதி அணை 1979-ம் ஆண்டு கட்டப் பட்டது. சுமார் 179 ஏக்கர் பரப்பளவில் 74 அடி உயரம் கொண்ட இந்த அணையின் மூலம் 6,583 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் பல கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது.
தற்போது அணையின் மதகுகள் மற்றும் கால்வாய் மதகுகள் துருப்பிடித்து இருப்பதால் நீர் கசிவு ஏற்படுகிறது. இதையடுத்து நபார்டு வங்கி உதவியுடன் ரூ. 2 கோடி செலவில் அணை மதகுகள் மற்றும் இயந்திரங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், உதவி பொறியாளர் மோகன்தாஸ் ஆகியோர் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.