

கும்பகோணம்: கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதியில் 500 ஏக்கரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்திருந்தனர். தற்போது, பருத்தி அறுவடை நடைபெற்று வருவதால், வேளாண் வணிகத் துறை சார்பில், தஞ்சாவூர் விற்பனைக்குழுவுக்கு உட்பட்ட கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.
பருத்தி மறைமுக ஏலத்துக்காக 1,875 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் கொண்டுவந்து, 1,292 லாட்டுகளில் வைத்திருந்தனர். தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் ரா.சுரேஷ்பாபு தலைமையில், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.தாட்சாயிணி முன்னிலையில், பண்ருட்டி, விழுப்புரம், கும்பகோணம், செம்பனார்கோவில் பகுதிகளைச் சேர்ந்த 9 வியாபாரிகள் மற்றும் இந்திய பருத்திக் கழக அலுவலர்கள் ஏலத்தில் கலந்துகொண்டனர். இதில், ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.7,199, குறைந்தபட்சமாக ரூ.5,300, சராசரியாக ரூ.6,200-க்கு மறைமுக ஏலம் போனது. நேற்று ஏலத்தில் விற்பனையான பருத்தியின் மொத்த மதிப்பு ரூ.1.18 கோடியாகும்.