

தென்மேற்கு பருவமழை காலத்தையொட்டி திருநெல்வேலியில் தாமிரபரணியில் தீயணைப்பு படையினர் மீட்பு பணி ஒத்திகையில் ஈடுபட்டனர்.
பருவமழை காலத்தில் தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்கள் அதை எதிர்கொள்வது, உயிர் சேதங்களை தடுப்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் தலைமை வகித்தார். உதவி அலுவலர் சுரேஷ் ஆனந்த், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.
ஆற்றில் சிக்கியவர்களை மிதவை படகுகளில் சென்று மீட்பது, முதலுதவி அளிப்பது, அவர்களை ஆம்புலன்சில் ஏற்றிச் செல்வது, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மீட்பது குறித்தும் மரக்கிளைகள் ஆற்றில் வரும்போது அவற்றை எவ்வாறு வெட்டி அப்புறப்படுத்துவது, குளிர்பான பாட்டில்கள், காலி சிலிண்டர்களை பயன்படுத்தி உயிர் தப்புவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.