

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு கடந்த 4 நாட்களாக நீடிக்கிறது.
மாவட்டத்தில் நாள்தோறும் 84 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 2.64 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த 27-ம் தேதியிலிருந்து தடுப்பூசி தட்டுப்பாடு மாவட்டத்தில் நீடிக்கிறது. கோவாக்சின் தடுப்பூசிகள் மையங்களுக்கு அறவே வழங்கப்படவில்லை என்பதால் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் கடந்தவர்கள், 2-வது தவணை செலுத்த முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேற்றுமுன்தினம் 5 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்து கள் மையங்களுக்கு வழங்கப்பட்டிரு ந்தன. அவை மாலையிலேயே தீர்ந்துபோயிருந்தன.
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள மையத்தில் நேற்று தடுப்பூசி போடப்படவில்லை என்பதால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாநகர பகுதியில் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு தச்சநல்லூர் நல்மேய்ப்பர்நகர் பாளையங்கோட்டை கேடிசி நகர் டார்லிங் நகர் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் தலா 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.