

தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சமூகநலத்துறை சார்பில் ரூ.46 லட்சம் செலவில் 'சகி' ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மருத்துவர் அறை,சமையல் அறை, 5 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவு, மனநலம் தொடர்பாக அறிவுரை வழங்கும் அறை, சட்டப் பிரிவு அறிவுரைவழங்கும் அறை, மைய நிர்வாகி அறை, தொழில்நுட்ப பணியாளர்கள் அறை மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்டவைகளுடன் 1,985 சதுர அடி பரப்பில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும், 20 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை மற்றும் தலா ரூ.2,000 கரோனா சிறப்பு நிதி வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ குடும்ப பிரச்சினையில் வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் இங்கு வந்து 5 நாட்கள் தங்கிக்கொள்ளலாம். மனநலம் தொடர்பான ஆலோசனைகள், சட்டரீதியான ஆலோசனைகள் வழங்கப்படும். கரோனா காலத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த 93 குழந்தைகள் உதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். அதுபோல தாய் அல்லதுதந்தை என ஒருவரை மட்டும் இழந்தவர்கள் மாநில அளவில் 3,499 பேர் விண்ணப்பித்துள்ளனர். தாய், தந்தை இல்லாமல் பாட்டி, தாத்தா பராமரிப்பில் இருந்த ஒருகுழந்தை பாட்டி தாத்தா இருவரையும் இழந்துள்ளது. இந்த விவரம் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
தூத்துக்குடி நிகிலேசன் நகர்பகுதியில் புறக்காவல் நிலையத்துக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டி.நேரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.