திருவட்டாறு தினசரி சந்தையில் ரூ.50 லட்சத்தில் மேம்பாடு பணி :
நாகர்கோவில்: திருவட்டாறு தினசரி சந்தை ரூ. 50 லட்சத்தில் மேம்படுத்தப்படுகிறது.
திருட்டாறு மேம்பாலத்தின் அருகே பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தினசரி சந்தை செயல்படுகிறது. சந்தையில் மேற்கூரை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலத்தில் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமம் அடைகின்றனர். எனவே, சந்தையில் மேற்கூரை வசதி, கழிப்பறை, குடிநீர் வசதி, மீன்பதப்படுத்தும் கிட்டங்கி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துமாறு, பொதுமக்கள் கோரினர்.
இதைத்தொடர்ந்து சந்தையை, அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: திருவட்டாறு தினசரி சந்தையை மேம்படுத்த, பத்மநாபபுரம் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தடையில்லா சான்று போன்றவை கிடைக்காததால் அப்பணிகளை தொடர முடியாமல் இருந்தது.
தற்போது, பேரூராட்சி உதவி இயக்குநர் மூலம் ரூ. 50 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசு அனுமதி கிடைத்ததும், சந்தையை நவீனப்படுத்தும் பணி தொடங்கும், என்றார். பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சனல்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ஜாண்சன் கலந்துகொண்டனர்.
