வழக்கறிஞர், குமாஸ்தாக்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்: பழனிசாமி கோரிக்கை :

வழக்கறிஞர், குமாஸ்தாக்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்: பழனிசாமி கோரிக்கை :
Updated on
1 min read

நலிவடைந்த வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்களுக்கு உடனடியாக கரோனா நிவாரண நிதி, வாழ்வாதார நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டாக நீதிமன்றங்களில் பெரும்பாலும்காணொலியிலேயே விசாரணை நடந்தது. இதனால், அனுபவப் பயிற்சி பெற முடியாமலும், பொருளாதார ரீதியாகவும் பெரும்பாலான வழக்கறிஞர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள், குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியர்கள், பேருந்து, ஆட்டோ,டாக்ஸி ஓட்டுநர்கள், இளம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் என பல தரப்பினரும் அரசின் உதவி கோரி கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது என்னிடம் மனு அளித்தனர். இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு கரோனா சிறப்பு நிதியுதவியை சட்டப்பேரவையில் அறிவிக்க இருந்தேன். திடீரென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பெரும்பாலான மக்கள்நலத் திட்டங்களை அறிவிக்க முடியாமல் போய்விட்டது.

தற்போதைய திமுக அரசு, வழக்கறிஞர்களுக்கு எவ்வித உதவியும் அறிவிக்கவில்லை.

எனவே, தமிழக அரசு முதல்கட்டமாக, கரோனா பேரிடர் காலத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் குமாஸ்தாக்களுக்கு உடனே நிவாரண நிதி, வாழ்வாதார நிதி வழங்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in