

ராமநாதபுரம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள அழகன்குளம் தேவர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கார்த்திக் (24). இப்பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கார்த்திக் அச்சிறுமியின் ஆபாச புகைப்படங்களை தனது மொபைலில் எடுத்து வைத்துக்கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அச்சிறுமியின் ஆபாச படங்களை ஊரில் உள்ள சிலருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியுள்ளார். அதனையடுத்து அச்சிறுமியின் தாய் திருமண வயது வந்ததும் தனது மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கார்த்திக்கின் குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார். ஆனால் கார்த்திக் மற்றும் அவரது அண்ணன் விஜய், தாய் ராமலெட்சுமி, பாட்டி புஷ்பவள்ளி ஆகியோர் திருமணம் செய்து கொள்ள முடியாது எனக்கூறி அச்சிறுமியின் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
எனவே அச்சிறுமியின் தாய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனையடுத்து கார்த்திக், விஜய், ராமலெட்சுமி, புஷ்பவள்ளி ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதில் கார்த்திக் மட்டும் கைது செய்யப்பட்டார்.