

நாமக்கல்: பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி நாமக்கல் எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் க.அன்புமணி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை மத்திய அரசு குறைக்க வேண்டும். கரோனா கால நிவாரண தொகையாக ரூ.7,500 மத்திய அரசு வழங்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தினசரி தடுப்பூசிகள் போடுவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.செங்கோட்டுவேல், பி.சுரேஷ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.