

கரோனா ஊரடங்கால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல், மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. தளர்வு அமலுக்கு வந்த முதல்நாளிலேயே அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஏராளமான பெற்றோர் வந்திருந்தனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
கரோனா ஊரடங்கால் பெரும் பாலானவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்க வைக்க முடியாத நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் காலணியில் தொடங்கி மடிக்கணினி வரை பல்வேறு பொருட்கள் இலவசமாக தருவதும், கடந்த காலங்களைக் காட்டிலும் பள்ளி வளாகம் சுகாதாரமானதாக மாறியுள்ளதும் பெற்றோரைக் கவர்ந்துள்ளது.
மேலும், அரசுப் பள்ளி மற்றும் அதன் ஆசிரியர்கள் மீதான பொதுவான கண்ணோட்டம் மாறியுள்ளது.
இதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவித்து பேருந்துகள் இயங்கத் தொடங்கினால், பல அரசுப் பள்ளி வளாகங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கும். ஒருசில அரசுப் பள்ளியில் சேர முக்கிய பிரமுகர்களின் பரிந்துரைகளைப் பெற்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, ஈரோடு அரசு மகளிர் மாதிரி பள்ளியில் இந்த ஆண்டு இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். மேலும் பலர் நேரடி சேர்க்கைக்கு வந்து செல்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, அரசுப் பள்ளிக்கு வரும் அனைத்து மாணவ, மாணவியரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். குறிப்பிட்ட வகுப்புகளில் மட்டும் சேர்த்து கொள்ளப்படுவர் என்ற நிபந்தனை எதுவும் இல்லை. பள்ளிகள் அவ்வாறு நிபந்தனை விதித்தால் புகார் செய்யலாம். ஜூலை 5-ம் தேதி முதல், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டப்படி, அரசின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பம் வழங்கப்படும், என்றனர்.