

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தைக் கண்டித்து இன்று (ஜுன் 30) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இது குறித்து அம்பகரத்தூர் கிராமவாசிகள், போராட்டக் குழுவினர் தரப்பில் கூறியது: புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள், கிராமப் பஞ்சாயத்துகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. அம்பகரத்தூர் கிராமப் பஞ்சாயத்து 11 வார்டுகள் கொண்டிருந்தது. மறுவரையறையின்போது திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகமும், மாநில தேர்தல் ஆணையமும் இணைந்து, 8 வார்டுகளாக குறைத்ததுடன் தலையாரி தெரு, தலையாரி சந்து, தலையாரி கீழத்தெரு, மதரசா தெரு, புதுமனைத்தெரு, ரைஸ்மில் தெரு, பழைய அம்பகரத்துார், காலனிபேட், கண்ணாப்பூர், கண்ணாப்பூர் பேட் உள்ளிட்டப் பகுதிகளை நல்லம்பல் கிராம பஞ்சாயத்தில் இணைத்துள்ளனர்.
இது குறித்து யாரிடமும் கருத்து கேட்கப்படவில்லை. எனவே இதைக் கண்டித்து, முதல் கட்டமாக அம்பகரத்தூரில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு, வணிகர்களின் ஒத்துழைப்போடு இன்று (ஜூன் 30) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது என தெரிவித்தனர்.