

பாளை சிறையில் கொலையான கைதியின் உடலை 69 நாட்களாக வாங்காத நிலையில் சட்டம்- ஒழுங்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெல்லை வாகைக்குளத்தைச் சேர்ந்த முத்து மனோ, கொலை மிரட்டல் வழக்கில் கைதாகி வைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஏப்.22-ல் பாளை சிறைக்கு மாற்றப்பட்டார்.
அன்று சிறையில் நடந்த மோதலில் முத்து மனோ கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர்.
முத்து மனோ கொலை தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் மீதுநடவடிக்கை எடுக்கவும், நீதி விசாரணை நடத்தவும், ரூ.2 கோடி இழப்பீடு கேட்டும் அவரது தந்தை பாபநாசம், உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, முத்துமனோவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் பாபநாசம் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகை யில், உயர் நீதிமன்றம் கெடு விதித்தும் முத்துமனோவின் உடலை உறவினர்கள் வாங்கவில்லை. நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியுள்ளனர். உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்காவிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது, என்றார்.
இதையடுத்து, நெல்லை மாநகர் காவல் ஆணையர், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நெல்லை மற்றும் வாகை குளத்தில் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு (இன்றைக்கு) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.