தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெறாததால் - திருப்புவனம் ஒன்றியத்தில் ரூ.1 கோடி பொதுநிதி முடக்கம் : வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிப்பு

தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெறாததால் -  திருப்புவனம் ஒன்றியத்தில் ரூ.1 கோடி பொதுநிதி முடக்கம் :  வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிப்பு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெறாததால் ரூ.1 கோடிக்கு மேல் பொதுநிதி முடங்கியுள்ளது. இதனால் வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருப்புவனம் ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில் 10 கவுன்சிலர்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும், 7 கவுன்சிலர்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் இருந்தனர். இந்நிலையில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி 2020 ஜன.11, ஜன.30 என 2 முறை ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல் 10 கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து 2020 மார்ச் 4-ல் நடக்கவிருந்த தேர்தலும் 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. தேர்தலை நடத்த வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெறாததால் ஒன்றியப் பொது நிதியில் இருந்து வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்த முடியாதநிலை உள்ளது. இதனால் ரூ.1 கோடிக்கு மேல் பொதுநிதி செலவழிக்காமல் முடங்கியுள்ளது.

ஏற்கெனவே நிதியின்றி ஊராட்சிகள் தள்ளாடும் நிலையில், ஒன்றியப் பொதுநிதியையும் செலவழிக்க முடியாததால் திருப்புவனம் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பொது நிதியில் இருந்து ஊழியர்களுக்கான ஊதியம் மட்டும் வழங்கி வருகிறோம். மற்ற செலவுகள் செய்வதில்லை. மேலும் ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தலாம் என உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிக்க வாய்ப்புள்ளது,’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in