

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி முத்துமனோ கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 68 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறை அலுவலர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு நடைபெறுகிறது. முத்துமனோவின் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும். இறந்த முத்துமனோவின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதார், ரேஷன் அட்டைகளை ஆட்சியர்அலுவலகத்தில் ஒப்படைக்கப் போவதாககூறி, முத்துமனோவின் உறவினர்களும், அவரது கிராம மக்களும் திருநெல்வேலிக்கு புறப்படத் தயாராயினர். இதையறிந்த போலீஸார் அங்கு சென்று 40 பெண்கள் உட்பட 75 பேரை கைது செய்து, நாங்குநேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். திருநெல்வேலி மாநகரம் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடி, பாளையங்கோட்டை மத்தியச் சிறை, வாகைகுளம் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டனர். திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. மாநகரம் முழுக்க முக்கிய சாலைகளில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.