நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் - கள்ளச்சாராயம், மது பதுக்கி விற்றதாக 723 பேர் கைது : காவல் கண்காணிப்பாளர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் -  கள்ளச்சாராயம், மது பதுக்கி விற்றதாக 723 பேர் கைது :  காவல் கண்காணிப்பாளர் தகவல்
Updated on
1 min read

கள்ளச்சாராயம் காய்ச்சுதல், வெளிமாநில மாதுபான பாட்டில்களை கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்தல் போன்ற குற்றச்செயல்கள் தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் 723 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், வெளி மாநில மது விற்பனை, அரசு மதுபானத்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது போன்ற குற்றச் செயல்களை முழுமையாக தடுக்கும் வகையில் சிறப்புப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறது.

இதில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள சமயத்தில் கள்ளச்சாராயம், வெளி மாநில மதுவிற்பனை, கள் இறக்கி விற்பனை, அரசு மதுபானத்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கடந்த ஒரு மாதத்தில் 723 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 10,889 டாஸ்மாக் மதுபான பாட்டில்கள், 2057 கர்நாடக மதுபான பாட்டில்கள், 436 லிட்டர் கள்ளச்சாராயம், 6,231 லிட்டர் சாராய ஊறல், 269 லிட்டர் கள் மற்றும் மதுபான கடத்தலுக்கு பயன்படுத்திய 11 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபோல் ராசிபுரம் அருகே கெடமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய காளி (எ) சீரான் என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுபோன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடு வோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in