

செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் பேசியதாவது: மழைக் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைப்பதற்கான இடங்களைக் கண்டறிந்து, அடிப்படை வசதிகள், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளவதுடன், பேரிடர், இழப்பீடு மற்றும் நிவாரணம் அளிக்கப்பட்ட விவரங்களை உடனுக்குடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
வெள்ளம் சூழும் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பு முகாம்களுக்கு அழைத்துவந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இதற்காக பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக இருப்பதுடன், மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை கூடுதலாக வைத்திருக்க வேண்டும். பருவ மழையின் போது அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார் மற்றும் பல்வேறு துறைஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.