

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் இந்து ஆதிதிராவிடர் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்தால் அவரது குடும்பவாழ்வாதாரத்தை முன்னேற்றும்வகையில், தேசிய பட்டியலினத்தோர் நிதிமேம்பாட்டுக் கழகம் மூலம் “ஆஷா” திட்டத்தின்கீழ் தொழில் செய்வதற்கு கடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இந்து ஆதிதிராவிடரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும், வயது 18 முதல் 60-க்குள்ளும் இருக்க வேண்டும். வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழக்கும்போது 18 முதல் 60 வயதுக்குள் இருந்தார் என்பதற்கும், கரோனா பாதிப்பால் உயிரிழந்தார் என்பதற்கும் மருத்துவச் சான்று இணைக்கப்பட வேண்டும்.
ஆஷா திட்டத்தின் கீழ் தொழில்தொடங்க திட்டத் தொகை அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதம் உள்ள 20 சதவீதம் அல்லது ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். கடன் தொகைக்கு வட்டி ரூ.6.5 சதவீதம் ஆகும். கடன் தொகையை 6 ஆண்டுகளுக்குள் மாதந்தோறும் திரும்பச் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ, மாவட்ட ஆட்சியர் வளாகம், 3-வது தளம், தூத்துக்குடி என்ற முகவரியில் நேரில் அணுகலாம். அல்லது தொலைபேசி எண்.0461-2341281 மற்றும் செல்போன் எண் 9445029532-ல் தொடர்பு கொள்ளலாம், எனத் தெரிவித்துள்ளார்.