

இளம்பெண்ணை ஏமாற்றியதாக தூத்துக்குடி ஆயுதப்படை காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தை சேர்ந்த சேவியர் மகன் ஜாக்சன் (24). இவர் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். 22 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இவர், நெருங்கிப் பழகி விட்டு ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள ஜாக்சனை உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக் குமார் உத்தரவிட்டார்.
இதன் பேரில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் மேற்பார்வையில், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜாக்சனை, பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.