

சேலத்தில் இருந்து கல்வி, வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு இரண்டு மையங்களில் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போட சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். கரோனா 2-வது அலை பெரும் பாதிப்பு, உயிரிழப்பை ஏற்படுத்தியதால், தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிகாலை 4 மணியில் இருந்து நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து, தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
சேலம் மாநகர பகுதியில் 30 இடங்களிலும், மாவட்ட பகுதிகளில் 102 இடங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு கல்வி பயிலவும், வேலைக்காகவும் செல்லக்கூடியவர்களின் நலன் கருதி இரண்டாவது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை 84 நாட்களுக்கு முன்னதாக போட்டுக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள ஏதுவாக சேலம் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போடும் பணியில் மாநகர சுகாதார அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தடுப்பூசி போட வரும் போது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட அனுமதி கடிதம், பணிபுரிவதற்கான அனுமதி கடிதம், கடவுச்சீட்டு, விமான டிக்கெட் உள்ளிட்ட ஆதாரங்களை காண்பித்து, தடுப்பூசி போட்டு கொள்ளலாம், என மாநகர சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.